பன்முக கலாசாரம் கொண்ட, இலங்கைத் திருநாட்டின் மக்களுக்கான அறிவுசார் தகவல்களை பகிரும் டிஜிட்டல் ஊடகம் ஒன்றின் தேவை குறித்து, நீண்ட நெடும் காலமாக பேசப்பட்டு வந்துள்ளது என்பதை நாம் நன்கு அறிந்திருந்தோம்.
அந்தத் தேவையை ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு கனவாக ஆரம்பித்தோம். அதற்கு ரோர் மீடியா என்றும் பெயரிட்டோம்.
இணையவழி ஊடகம் எனும் முறையில் உடனுக்குடன் நெட்டிசன்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்பது மிகவும் இலகுவான வழியாக இருந்தது. ஆனால் எந்த ஒரு தொடக்கத்திற்கும் இருக்கும் சவால் போன்றே நாமும் ஆரம்பத்தில் சில சவால்களுக்கு முகம் கொடுத்தோம்.
இணையவெளியெங்கும் கொட்டிக்கிடக்கும் தகவல்களால் இன்று “உள்ளங்கையில் உலகம்” எனும் வாழ்வியலுக்குள் நாம் வந்துவிட்டோம். அறிவுசார் தகவல்களை வழங்கும் போது வழமைகளில் இருந்து தனித்துத் தெரியும் வழியோன்றை நாம் தெரிவு செய்ய வேண்டி இருந்தது என்பதுவும் எங்களுக்கு முன்னால் இருந்த சவால்களுல் ஒன்றாகும்.
இந்த ஐந்து வருட காலத்தில் நாம் கடந்து வந்தவை ஏராளம். எம் ஆக்கங்களின் எண்ணிக்கையை விட எம் தரத்தில் நாம் மிகவும் அக்கறை கொண்டிருந்தோம். தெற்காசிய பிராந்தியத்தின் கலாசாரம், பண்பாடு, சமூக போராட்டங்கள், தனி மனித ஆளுமைகள், சுற்றுலா, நவநாகரிகம், வரலாற்றுச் சுவடுகள் எனும் தலைப்புகளில் மக்கள் அதிகம் அறிந்திராத விடயங்களை அவர்களிடம் கொண்டு போய் சேர்த்துளோம்.
கடந்த தைப்பொங்கல் தினம் தொடக்கம் புதுப்பொழிவு பெற்று, “தமிழை உலகுக்கு உலகை தமிழுக்கு” எனும் குறிக்கோளுடன் பயணித்து வரும் ரோர் தமிழின் ஆக்கங்கள் ஆரம்பம் காலம் தொடக்கம் நாம் எதிர்பாரா பெறுபேறுகளை பெற்றுத்தந்தது. அத்தோடு மட்டுமல்லாமல் இன்றுவரை எம்மை வாசிக்கவும் பார்வையிடவும் பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.
உலகெங்கும் பறந்து வாழும் தமிழ் மக்களின் ரசனைக்கும் அறிவாற்றலுக்கும் உதவும் தகவல்களையும், தமிழ் பாரம்பர்ய அம்சங்களையும் சிறு காணொளிகளாக, வாசிக்க இலகுவான தரம் மிகு ஆக்கங்களாக படைத்து வரும் நாம், இலங்கை மண்ணுக்கே உரித்தான பௌதீக அம்சங்களையும் இனிவரும் காலங்களில் அதிகளவில் தொடர்ந்து வழங்க உத்தேசித்துள்ளோம்.
எமது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் எனும் வலைதளங்கள் ஊடாக எமது வாசகர்களை நாம் சென்றடைகிறோம். இத்துடன் யூடியூப் வழியே பல புதிய நிகழ்ச்சிகளை, புதிய ஆக்கங்களை உங்களிடம் அறிமுகம் செய்து எம்மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகளுக்கும் இதுவரை நீங்கள் வழங்கி வந்த ஊக்கங்களுக்கும் தார்மீக பொறுப்புடன் நடந்திட திட்டமிட்டுள்ளோம்.
வாருங்கள்! இனிவரும் தலைமுறைக்கான அறிவுசார் தகவல் தொழில்நுட்பத்தின் புரட்சியை நாம் இணைந்தே உருவாக்குவோம்!